இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், ஜோதிடர் மற்றும் ஆன்மீக குணப்படுத்துபவர் போல நடித்து, ஆன்மீக நம்பிக்கையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி பெண்ணொருவரிடமிருந்து 800,000 டாலர்களை மோசடி செய்துவிட்டு நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளதாக ரொறன்ரோ (Toronto) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2025 வரை நடைபெற்ற இந்த மோசடி தொடர்பில் கங்காதர் பாபு (Gangadhar Babu – 29) என்ற நபருக்கு எதிராக கனடா தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
குறிப்பிட்ட காலப்பகுதியில், சந்தேகநபர் “பாபு” என்ற பெயரில் ஜோதிடர், எதிர்காலம் கணிப்பவர் மற்றும் ஆன்மீக குணம் தருபவர் போல நடித்துள்ளார்.
“விசித்திரமான சடங்குகள் மற்றும் பயமுறுத்தும் கூற்றுகளைப் பயன்படுத்தி”, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது அன்பிற்குரியவர்களுக்கும் ஆன்மீகப் பாதுகாப்பு அளிக்க பணம் தராவிட்டால் அவர்கள் உயிரிழப்பார்கள் அல்லது கடுமையான பாதிப்புகளைச் சந்திப்பார்கள் என நம்பவைத்து சந்தேகநபர் பணத்தைப் பறித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
$5,000 க்கும் அதிகமான பண மோசடி, குற்றத்தின் மூலம் பெறப்பட்ட பணத்தை வைத்திருத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் (Laundering proceeds of crime) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் தேடப்பட்டு வருகிறார்.
பாபு மீண்டும் இந்தியாவிற்கு தப்பியோடியிருக்கலாம் என நம்புவதாக ரொறன்ரோ பொலிஸார் CTV செய்திகளுக்குத் தெரிவித்துள்ளனர்.
29 வயதான இந்தச் சந்தேகநபர் “இந்தியன் சைக்கிக் அண்ட் ஸ்பிரிச்சுவல் ஹீலர்” (Indian Psychic and Spiritual Healer) என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதனால் மேலும் பலர் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் 5 அடி 6 அங்குல உயரமும், மெலிந்த உடலமைப்பும், கருமையான சுருட்டை முடியும், அடர் பழுப்பு நிறக் கண்களும், ஒழுங்கமைக்கப்பட்ட தாடியும் கொண்டவர் என்றும், அவரது முன் பற்களுக்கு இடையே தெளிவான இடைவெளி உள்ளது என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை குறித்த தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், 416-808-3200 என்ற எண்ணிலோ அல்லது இரகசியமாக ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பிலோ தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.