செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.
ரொறன்ரோ மேயர் தேர்தலுக்கான முன் கூட்டிய வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் தேர்தல் நாளுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் முன்னணியில் உள்ள இரு மேயர் வேட்பாளர்களுக்கும் இடையிலான ஆதரவு இடைவெளி குறைந்துள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
தேர்தல் நாளுக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் ரொறன்ரோவின் அடுத்த மேயருக்கான போட்டியில் முன்னணி வேட்பாளர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவக்கூடும் என புதிய கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகின்றது.
கிறிஸ் அலெக்சாண்டர் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ‘மெயின்ஸ்ட்ரீட் ரிசர்ச்’ நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி பதவியிலிருக்கும் மேயர் ஒலிவியா சௌ 40.8 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நகர சபை உறுப்பினர் பிரட் போர்ட் 38.3 சதவீத ஆதரவைப் பெற்று 2.5 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். அத்துடன் 10 சதவீதமான வாக்காளர்கள் இன்னமும் முடிவெடுக்காதவர்களாகவே உள்ளனர் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
முடிவெடுத்த மற்றும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை நோக்கிச் சாயும் வாக்காளர்களிடையே சௌவுக்கும் பிரட்போர்ட்டுக்கும் இடையிலான வித்தியாசம் 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
போட்டி மிகவும் இறுக்கமான நிலையை எட்டியுள்ள தருணத்தில் ஒக்டோபர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக ‘மெயின்ஸ்ட்ரீட் ரிசர்ச்’ நிறுவனத்தின் தலைவரும் முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான கிட்டோ மக்கி தெரிவித்துள்ளார்.
“பிரட்போர்ட்டின் தேர்தல் பிரச்சாரம் சற்று வேகமெடுத்துள்ளதைப்போல் தெரிகின்றது” என அவர் ஊடக அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். “தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில் சௌ மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மேலும் மேலும் நிச்சயமற்றதாகி வருகின்றன.”
“இந்தத் தேர்தல் எவ்வளவு இறுக்கமாக அமையப்போகிறது வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் எந்தளவுக்கு திரண்டு வந்து வாக்களிக்கிறார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது” என்றும் அவர் கூறினார்.