சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், ஜனாதிபதி அநுர விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியிலேயே சாட்சியமளிக்க சமூகமளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (2304.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கடந்த 2025 ஜனவரி மாதம் முறையான சோதனைகளின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட நாடாளுமன்றக் குழு நியமிக்கப்பட்டது.
நீதியமைச்சர் ஹர்ஷண நாணயகார தலைமையிலான இந்தத் தெரிவுக்குழுவில், அரசாங்கத் தரப்பில் 8 உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தரப்பில் 4 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு மற்றும் அன்றைய நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரை சாட்சியமளிக்க அழைக்குமாறு எதிர்க்கட்சி முன்வைத்த யோசனை, தெரிவுக்குழுவில் பெரும்பான்மை வாக்குகளால் நேற்று நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறான சூழலிலேயே முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.