சீன அரசாங்க அதிகாரி எனத் தான் நம்பிய ஒருவருக்காகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒன்டாரியோவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அமெரிக்க நீதிமன்றத்தில் பொய் அறிக்கை அளித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து, தான் குற்றமற்றவர் (pleaded not guilty) எனத் தெரிவித்துள்ளார்.
மிச்சிகன் நீதிமன்றத்தின் ஆவணங்களின்படி, வேஹெங் செங் (Weiheng Zeng) திங்கள்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது (arraignment) தனது பிணையறிவிப்பைச் சமர்ப்பித்துள்ளார்.
வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் (University of Waterloo) படித்து வந்த சீனக் குடிமகனான செங், இணையவழி அரட்டைத் தளமொன்றில் தான் சந்தித்த மர்மமான சீனத் தொடர்பாளரின் கோரிக்கைக்கு இணங்க, ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையம் மற்றும் சிகாகோவின் ஓஹேர் (O’Hare) விமான நிலையம் ஆகியவற்றைப் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், கடந்த ஏப்ரல் மாதம் ஓஹேர் விமான நிலையத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்துடன் தொடர்புடையவராகவே செங் முதன்முதலில் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டதாக FBI முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அப்போதே ஃபெட்எக்ஸ் (FedEx) வளாகத்தில் நபர் ஒருவர் புகைப்படங்கள் எடுப்பதும், ஃபோர்க்லிஃப்ட் (forklift) வாகனத்தின் மீது ஏறுவதும், பூட்டப்பட்ட டிரெய்லர்களைத் திறக்க முயல்வதும் அவதானிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்திற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்குள் காரில் நுழைந்த செங், பின்னர் அந்தச் சம்பவ இடத்தில் காணப்பட்ட மினிவேன் ஒன்றுடன் தொடர்புபடுத்தப்பட்டதாகப் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் அதே வாகனத்தில் செங் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது, அவர் பலமுறை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர் ஒன்றுக்கொன்று முரணான வாக்குமூலங்களை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
சிகாகோ பயணத்தின் போது விமானங்களைப் புகைப்படம் எடுத்ததாகச் செங் முதலில் கூறியிருந்தார், ஆனால் எல்லைப் பாதுகாப்பு முகவர்கள் அவரது கைபேசியைப் பரிசோதித்தபோது, அதில் விமானங்கள் மற்றும் இராணுவ விமானங்களின் புகைப்படங்களும், செங் உட்பட பலர் தந்திரோபாய உடைகளை (tactical clothes) அணிந்து கொண்டு துப்பாக்கிகளை ஏந்தியிருக்கும் புகைப்படங்களும் கண்டெடுக்கப்பட்டதாக அந்த ஆவணம் தெரிவித்துள்ளது.
விமானக் கட்டுப்பாட்டு ரேடார் (flight radar) இணையதளத்திற்காக மாதிரி விமானங்களின் படங்களை எடுத்ததாக முகவர்களிடம் கூறிய அவர், தனக்கு எவ்வித இராணுவப் பயிற்சியும் இல்லை என மறுத்தார்.
எல்லை முகவர்களுடனான இரண்டாவது நேர்காணலில், ஓஹேர் விமான நிலையத்தில் பொதுமக்கள் நிறுத்துமிடத்தில் இருந்தே விமானங்கள் தரையிறங்குவதைப் படம் பிடித்ததாகச் செங் கூறினார், ஆனால் பின்னர் ஃபெட்எக்ஸ் வளாகத்தின் ஃபோர்க்லிஃப்ட்டில் இருந்தே படங்களை எடுத்ததாகக் ஒப்புக்கொண்டார் எனப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பியர்சன் விமான நிலையத்தில் உள்ள ஃபெட்எக்ஸ் வளாகத்திற்குள் முன்னதாக அத்துமீறி நுழைந்து பிடிபட்டதாகவும் அவர் கூறினார்.
தனது மூன்றாவது நேர்காணலின் போது செங் முதன்முதலில் ஒரு சீனத் தொடர்பாளரைக் குறிப்பிட்டதுடன், மேலதிக விவரங்களை அளிக்கும்போது அவரது வாக்குமூலங்கள் தொடர்ந்து மாறின என்று அந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.
ஆரம்பத்தில், விமானங்களைக் கவனிப்போருக்கான (aviation spotters) இணையதளம் மூலம் அந்தத் தொடர்பாளர் தன்னை அணுகி, ஆராய்ச்சித் தேவைக்காகக் குறிப்பிட்ட சில விமானங்களைப் படம் பிடிக்குமாறு கேட்டுக் கொண்டதாகப் பிரமாணப் பத்திரத்தில் செங் கூறியிருந்தார்.
இருப்பினும், போக்குவரத்து விநியோக நடைமுறைகள் (transportation logistics) குறித்த தகவல்களையும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட இடங்களின் புகைப்படங்களையும் மட்டுமே எதிர்பார்த்த அந்தத் தொடர்பாளர் வழங்கிய பின்னணிச் கதையே (cover story) அது என்பதை செங் பின்னர் ஒப்புக்கொண்டதாக அந்த முகவர் குற்றம் சாட்டினார்.
மேலும், அந்தத் தொடர்பாளர் தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் மட்டுமே அணுகக்கூடிய பகுதிகளின் வீடியோக்களையும் அனுப்பியதாகவும், அதனால் அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு உடையவரோ எனத் தான் சந்தேகித்ததாகவும் செங் தெரிவித்ததாக அந்த ஆவணம் கூறுகிறது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அட்டவணையின்படி, அவரது வழக்கு விசாரணை ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.