சென்னை:
தீபாவளிப் பண்டிகை முடிந்துள்ள நிலையில், ஒரே நாளில் 11 படுகொலைகள் அரங்கேறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் விஜய்யை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
படுகொலைகள் மற்றும் பாதுகாப்பின்மை:
இது குறித்துச் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார இறுதியில் தலைமைச் செயலகத்திற்கு விடுமுறை விடுவது போல, சட்டம் ஒழுங்குக்கும் பொது அமைதிக்கும் முதலமைச்சர் விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட்ட நேற்று ஒரே நாளில் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தேனியில் பொதுச்சாலையை மறித்துப் பட்டாசு வெடித்தவர்களைத் தட்டிக் கேட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்நிலையென்றால், பொதுமக்கள் யாரை நம்பி வீதிக்கு வருவார்கள்? ஒரு பண்டிகை நாளைக் கூடப் பாதுகாப்பாகக் கொண்டாட முடியாத அளவுக்குச் சட்டம் ஒழுங்கு மோசமாகச் சீரழிந்திருப்பதே தவெக ஆட்சியின் கையாலாகாததனத்திற்குச் சான்றாகும்,” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் அதிகாரத் திமிர்:
தொடர்ந்து அவர், “சிறைவாசிகள் சர்வ சாதாரணமாகச் சிறையிலிருந்து தப்பிப்பது ஒருபுறம், போதைப்பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம் மறுபுறம் நிலவுகிறது. தவெக நிர்வாகிகளே போதைப்பொருள் கடத்தலில் மத்திய அரசுப் படையால் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், மதுக்கடைக்கு எதிராகப் போராடியவரின் கடையில் போதைப்பொருளை வைத்துப் பொய் வழக்குத் தொடுக்க முனைகின்றனர். தொகுதி சார்ந்த குறையைக் கூறச் சென்றவரைத் துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கும் காணொளி தவெக ஆட்சியின் அதிகாரத் திமிருக்கும் அடாவடித்தனத்துக்குமான சான்றாகும். என் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்த தவெக அரசு, துணை சபாநாயகர் மீது இப்போது என்ன செய்யப் போகிறது? பாதிக்கப்பட்ட நபரை மிரட்டி ஒன்றுமே நடக்கவில்லை எனப் பேச வைப்பதெல்லாம் கேவலமாக இல்லையா?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொறுப்பற்ற முதலமைச்சர்:
மேலும், “குற்றங்களை நிகழவிட்டுவிட்டுச் சிறையிலடைப்பது மட்டும் காவல்துறையின் வேலையல்ல; குற்றங்களே நிகழாத அமைதியான சமூகத்தைப் படைப்பதே முதன்மை நோக்கம். தவறுகளுக்குப் பொறுப்பேற்பதும் பிழைகளைத் திருத்திக்கொள்வதுமே தலைமைப்பண்புக்கான அடிப்படை. இதுவெல்லாம் முதலமைச்சர் விஜய்க்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், ரோடு ஷோ என்ற பெயரில் நடக்கும் கேலிக்கூத்துகளும், மக்களைத் திசைதிருப்ப நடக்கும் மலினமான நாடகங்களுமே அவரிடம் உள்ள ஒற்றைத் தீர்வாகும். இவை கவனத்தை மடைமாற்றுமே ஒழியப் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தராது,” என்று சீமான் தனது கண்டன அறிக்கையில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.