கென்யாவின் நைரோபியில் உள்ள மசூதி ஒன்றில் புகுந்து, அரிவாளால் தாக்கி சுமார் ஐந்து பேரை காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட கனடிய நபர் ஒருவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் குற்றப்புலனாய்வு இயக்குநரகம் (DCI) தெரிவித்துள்ளபடி, 32 வயதான அந்த நபர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது பயங்கரவாதம் மற்றும் உடல் ரீதியான கடுமையான காயம் விளைவித்தல் உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம், ஒரு நபர் தொழுகைக்கு வந்தவரைப் போல மசூதிக்குள் நுழைந்துள்ளார். உள்ளே சென்றதும் மசூதியின் பிரதான கதவுகளைப் பூட்டிய அவர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஐந்து பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சந்தேக நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டதோடு, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் மீட்கப்பட்டது.
தற்போது அந்த நபர் நைரோபியில் உள்ள கமிட்டி (Kamiti) உயர்பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள அடுத்த நீதிமன்ற விசாரணையில் அவரது பிணை (Bail) குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.