கடும் போருக்கு மத்தியில், பிறந்து இரண்டு வருடங்களாகத் தனது பெற்றோரைப் பார்த்திராத 11 பச்சிளம் குழந்தைகள், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுக்குழுவின் ஊடாக மீண்டும் காஸாவில் உள்ள தங்களது பெற்றோரிடம் இணைந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காஸாவின் அல்-ஷிபா வைத்தியசாலையை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டபோது, அங்கிருந்த தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 29 முன்கூட்டியே பிறந்த குழந்தைகள் அவசரமாக எகிப்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
அப்போதைய போர்ச் சூழல் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளினால், பெற்றோர்கள் குழந்தைகளுடன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வைத்தியர்கள் மட்டுமே குழந்தைகளுடன் சென்றனர்.
எகிப்திற்குக் கொண்டு செல்லப்பட்ட 29 குழந்தைகளில் 07 குழந்தைகள் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தத்தி நடக்கும் நிலையை எட்டியுள்ள 11 குழந்தைகள் ஐ.நா உதவியுடன் காஸாவுக்குக் கொண்டு வரப்பட்டு கடந்த திங்கட்கிழமை (மார் 30) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பிஸான் என்ற சிறுமி பிறக்கும்போதே அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் (அவரது சகோதரி ஹபீபா உட்பட) இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். காயமடைந்த நிலையில் இருந்த அவரது தாய்க்கு அவசர அறுவை சிகிச்சை மூலம் பிஸான் பிறந்தார்.
“இரண்டரை ஆண்டுகளாக எனது மகளை என்னால் தொடக்கூட முடியவில்லை. இன்று அவளுக்கு ஒரு புதிய பிறந்தநாள் போல இருக்கிறது” என அவரது தாய் சுந்துஸ் அல்-குர்த் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். நீண்ட காலப் பிரிவால் பல குழந்தைகள் தங்களது பெற்றோரை அடையாளம் காணத் தடுமாறுகின்றனர். அவர்கள் மெதுவாகத் தங்களது குடும்பத்துடன் ஒட்டி உறவாட ஆரம்பித்துள்ளனர்.
காஸாவில் உள்ள 75% மருத்துவ விநியோகங்கள் மற்றும் 52% அடிப்படை மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளதாக அல்-ஷிபா வைத்தியசாலை பணிப்பாளர் முஹம்மது அபு செல்மியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.