ஜூலை 29, 2026 முதல் அமுலுக்கு வரும் வகையில், IRCC இன் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, பரஸ்பர வேலைவாய்ப்பு விலக்களிப்பின் (C20 reciprocal employment exemption) கீழ் விண்ணப்பிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள், ஏற்கனவே வெளிநாட்டில் உள்ள குறித்த நிறுவனத்தில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
இதன்படி, கனடாவிற்கு வந்தடைந்த பின்னரே அந்த நிறுவனத்தில் பணியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள ஒருவர், இனி C20 பிரிவின் கீழ் தகுதி பெறமாட்டாராக இருக்கலாம்.
பல்வேறு நாடுகளில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரச அமைப்புகள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் (Non-profits) ஊழியர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் முக்கியமானதாகும்.
புதுப்பிக்கப்பட்ட விதிகளின் கீழ், முதலாளிகள் கனடியர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு வெளிநாடுகளில் பரஸ்பர வேலைவாய்ப்பு வாய்ப்புகள் இருப்பதை நிரூபிக்க வேண்டும். இந்த பரஸ்பரத்தன்மை (Reciprocity) நேரடியாக கனடாவிற்கும் குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கும் இடையே மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
C20 அல்லது வேறு எந்த LMIA விலக்களிப்பின் கீழும் தகுதி பெறாத விண்ணப்பதாரர்களுக்கு, முதலாளி தற்காலிக வெளிநாட்டு ஊழியர் திட்டத்தின் (TFWP) மூலம் சென்று LMIA அனுமதியைப் பெற வேண்டியிருக்கும். இது கூடுதல் நேரத்தையும் செலவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
முக்கிய குறிப்பு: C20 விலக்களிப்பானது சர்வதேச அனுபவ கனடா (IEC) பணி அனுமதிப்பத்திரங்களுக்குப் பொருந்தாது; அவை வேறுபட்ட விலக்களிப்புப் பிரிவைப் பயன்படுத்துகின்றன.
நீங்கள் LMIA-விலக்களிக்கப்பட்ட பணி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டிருந்தால், சமீபத்திய IRCC வழிகாட்டுதல்களின் கீழ் உங்களின் தகுதியை மதிப்பாய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.