கனடா – கல்முனை பிராந்திய இணையத்தின் ‘அன்பின் அழைப்பு’ நிகழ்வு கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை Toronto – Milliken Park இல் காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை விசு கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கோடை காலத்தில் கனடாவில் நடைபெறும் மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கவற்றில் கனடா – கல்முனை பிராந்திய இணையத்தின் ‘அன்பின் அழைப்பு’ முக்கியம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது.
‘ஒன்றுபட்டால் உயர்வு இணைந்தால் இனிமை’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நம்மவர்களின் பாரம்பரிய உணவுகள் தொடக்கம் மேலைத்தேய உணவுகள் வரை சகல வயதினரதும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் விதத்தில் உணவுகள் சுடச்சுடத் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
பெருந்திரளான மக்கள் கனடாவில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்து கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் ஆடல், பாடல், விளையாட்டுக்கள் என பல்வேறு மகிழ்வூட்டக் கூடி அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.
கல்முனை பிராந்திய இணையத்தினரால் தமிழ்ச்சமூக மையத்துக்கு 10,000 கனேடியன் டொலர் நன்கொடை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Behind Me Mediaவுக்கு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் விசு கருணாநிதி வழங்கிய நேர்காணலில் மிக மகிழ்வாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்நிகழ்வு ஊர்மக்கள் ஒன்று கூடித் தேர் இழுப்பது போன்றுள்ளதாகவும் எல்லோரையும் ஒன்றாக்கி பல்வேறு விதமான ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை தாங்கள் முன்னெடுத்துக் கொண்டிருப்பதையும் பகிர்ந்துகொண்டார்.





