இலங்கையின் வர்த்தக நிறுவனங்களுக்கு நீண்டகால ரூபாய் நிதி வசதிகளை வழங்க உலக வங்கி குழுமம் புதிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனமான IFC மற்றும் HSBC இலங்கை இடையே ஆறு ஆண்டுகால ரூபாய் கடன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும். ஆசியாவில் இலங்கை ரூபாயைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முதலாவது பரிவர்த்தனை இதுவாகும்.
இந்த நிதி வசதி மூலம் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு நீண்டகால முதலீடுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமொன்றுக்கு 10 ஆண்டுகாலத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான ரூபாய் கடனை IFC வழங்கியுள்ளது.
வெளிநாட்டு நாணய மாற்று விகித அபாயத்தைக் குறைத்தல், உள்ளூர் நாணயத்தில் நீண்டகால கடன் வசதிகளை வழங்குதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளை ஊக்குவித்தல், இலங்கையின் தனியார் துறை வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் என்பனவே இதன் முக்கிய நோக்கங்களாகும்.
எதிர்காலத்தில் இலங்கையில் இத்தகைய நீண்டகால ரூபாய் நிதி வசதிகளை மேலும் விரிவுபடுத்த உலக வங்கி திட்டமிட்டுள்ளது.