கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணம், பாரி (Barrie) பகுதியைச் சேர்ந்த ரைட்-ஷேர் (Ride-share) வாகன ஓட்டுநர் ஒருவர், தனது வாகனத்தில் பயணித்த பெண் வாடிக்கையாளரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் பாலியல் துஷ்பிரயோகம் நடந்துள்ளதாகக் கிடைத்த புகாரை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட நபரும் குற்றம் சாட்டப்பட்ட நபரும் ஒருவருக்குக் கொருவர் முன்பின் தெரியாதவர்கள் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விசாரணையின் முடிவில், 58 வயதுடைய ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக இரண்டு பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Sexual assault) பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணை விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வரும் ஜூலை மாதம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஓட்டுநரால் மேலும் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே, இது குறித்து ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் 1-888-310-1122 என்ற எண்ணில் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான இந்த அடுக்குக் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.