2019-ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் (2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை) 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உயிரிழந்தவர்களுக்காக விசேட மத வழிபாடுகளும் அஞ்சலி நிகழ்வுகளும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
யாழ். மறைமாவட்டத்தில் உயிரிழந்த ஆன்மாக்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் விசேட அஞ்சலி நிகழ்வுகள் யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றன.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தலைமையில் அஞ்சலி வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாண ஆயர் இல்ல சிற்றாலய முன்றலில் இதற்கெனப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
: யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளளை டேவிட் அவர்கள் விசேட அஞ்சலி உரையை வழங்கினார். இதில் அந்தத் துயரச் சம்பவத்தின் வடுக்கள் மற்றும் நீதிக்கான காத்திருப்பு குறித்துப் பேசப்பட்டது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்பு கட்டான புனித செபஸ்தியார் தேவாலயம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களில் இன்று காலை தாக்குதல் இடம்பெற்ற நேரத்திற்கு (8:45 AM) மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு விசேட திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.