மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mikhail Murashko) தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (03) காலை இலங்கை வந்தடைந்தனர்.
மாஸ்கோவிலிருந்து ஏரோஃப்ளோட் (Aeroflot) நிறுவனத்திற்குச் சொந்தமான SU-288 விமானம் மூலம் அவர்கள் காலை 10.20 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர் முனையத்தில் (VIP terminal), அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் உள்ளிட்டோரால் அத் தூதுக்குழுவினர் வரவேற்கப்பட்டனர்.
இந்த விஜயத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சர், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
மேலும், அத் தூதுக்குழுவினர் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடம் ஆகியவற்றிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.