சென்னை:
முதலமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அநாகரீகமாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் இன்று கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை இன்றே விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனிடையே, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், \”உதயநிதி மனதில் இத்தனை வக்கிரம் இருக்கிறது. இவ்வளவு வக்கிரத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் இவர்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். பெண்களுக்கு எதிராகக் கொச்சையாகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ, அதைத்தான் காவல்துறை செய்துள்ளது” என்று ஆவேசமாகக் கூறினார்.
மேலும், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அல்லது எம்.ஜி.ஆர். இப்போது இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்களோ, அதையே இன்று முதலமைச்சர் விஜய் செய்திருக்கிறார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, பொய்க்கால் குதிரையைப் போல திமுகவின் பின்னால் ஒளிந்துகொண்டு இருக்கிறார். உதயநிதி கூறிய ஆபாசக் கருத்தை எடப்பாடி ஏற்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி உதயநிதி அவதூறாகப் பேசியபோது, முதலமைச்சராக இருந்த எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் நிர்மல்குமார், “உதயநிதி பேசியதை அவர்கள் வீடுகளில் உள்ளவர்களே ஏற்பார்களா?” எனச் சரமாரியாகக் கேள்வியெழுப்பினார்.
முன்னதாக, மின்சாரத்துறையில் 700 உதவிப் பொறியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்கிய அமைச்சர் நிர்மல்குமாருக்கு மின்வாரிய பொறியாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர், “மக்களுக்காக நாம் இன்னும் நிறையப் பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. 15 நிமிடங்களுக்கு மேல் எங்கேனும் மின்தடை ஏற்பட்டால், அதிகாரிகள் உடனடியாகத் தலைமை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துங்கள். 15 நிமிடங்களுக்குள் மின் விநியோகத்தை மீண்டும் சீரமைத்து வழங்குவதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
#MinisterNirmalkumar #UdhayanidhiStalin #EPS #TVKGovt #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #PowerCutIssue #PoliticalUpdate #TamilNewsLive