ஈரானின் மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன (Petrochemical) உற்பத்தி நிலையங்கள் மீது இஸ்ரேலியப் படைகள் (IDF) மிக உக்கிரமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரானின் அசலுயே பகுதியில் அமைந்துள்ள, நாட்டின் மொத்த உற்பத்தியில் பாதியைப் பூர்த்தி செய்யும் மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன ஆலை மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியுள்ளது.
கடந்த வாரம் ஒரு ஆலை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் மூலம் ஈரானின் மொத்த பெட்ரோலிய இரசாயன ஏற்றுமதியில் 85 சதவீதத்தை வழங்கி வந்த இரண்டு பிரதான ஆலைகளும் தற்போது முழுமையாகச் செயலிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் ஈரானிய ஆட்சிக்கு பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) நிதி ஆதாரங்களையும், இராணுவ வலிமையையும் முடக்குவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ‘தஸ்னிம்’ (Tasnim) செய்தி நிறுவனம், இரண்டு பெட்ரோலிய இரசாயன நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானிய உள்கட்டமைப்புகளை “முழு பலத்துடன்” தொடர்ந்து தாக்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், ஈரானின் பொருளாதார முதுகெலும்பை உடைக்கும் இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.