அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று பிற்பகல் தொடங்கவுள்ளன.
கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தோல்வியில் முடிந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நகரின் ‘செரீனா ஹோட்டலில்’ (Serena Hotel) தங்கியிருக்கும் விருந்தினர்கள், இன்றைய கூட்டத்திற்கான ஏற்பாடுகளுக்காக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, வெளிநாட்டுத் தூதுக்குழுக்களின் வருகையை முன்னிட்டு முக்கிய சாலைகளை மூடுவதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
தனது “பிரதிநிதிகள்” திங்கள்கிழமை மாலை இஸ்லாமாபாத் வந்தடைவார்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஈரான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடரும் வரை அதிகாரிகள் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டு வார கால போர்நிறுத்தம் வரும் புதன்கிழமையுடன் முடிவடைகிறது. ஒருவேளை உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரானின் உள்கட்டமைப்புகளை அழித்துவிடுவேன் என்ற மிரட்டலை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.