அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி என தன்னைக் காட்டிக்கொண்டு, கனடாவில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 40 இலட்சத்துக்கும் அதிக தொகையை மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை ஏமாற்றி, கனடாவின் சுப்பர் மார்க்கெட்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தச் சந்தேக நபர் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு 7 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள், சந்தேக நபரைக் கைது செய்ய பல முறை முயன்றபோதிலும் அவர் தொடர்ந்து தலைமறைவாகி இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட பணியகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுச் சுற்றிவளைப்பின்போது, குச்சவெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞராவார்.
இவருக்கு எதிராக ஏற்கனவே நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அவிசாவளை ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த நபருக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மேலும் பலரிடமிருந்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆரம்பக்கட்ட முறைப்பாடுகளின்படி மோசடித் தொகை 40 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தபோதிலும், தற்போது நடத்தப்பட்டுள்ள விரிவான விசாரணைகளின்படி இவர் மோசடி செய்துள்ள மொத்த பணம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.