இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையே திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளையும் இணைக்கும் எரிபொருள் குழாய் திட்ட முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய விக்ரம் மிஸ்ரி பின்வருமாறு தெரிவித்தார்:
மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு) நிலவும் போர் பதற்றங்களால் உலகம் முழுவதும் குறிப்பாக தெற்காசிய பிராந்தியம் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில் இத்தகைய எரிசக்தி இணைப்புத் திட்டங்களின் மதிப்பு இன்றைய சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
“இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நாகரிகத் தொடர்புகளை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘அண்டை நாட்டுக்கு முன்னுரிமை’கொள்கையானது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவதில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை அவர் பலமுறை குறிப்பிட்டார். குறிப்பாக:2022 இல் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் ‘முதல் பதிலளிப்பாளர்’ பாத்திரம்.2025 டிசம்பரில் ‘டிட்வா’ சூறாவளி பாதிப்பின் போது வழங்கப்பட்ட உதவி.
தற்போது நிலவும் மத்திய கிழக்கு நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கையாள இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்பு.ஆகியவற்றை ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மேலும் துறைமுகங்கள் எரிசக்தி டிஜிட்டல் மற்றும் இணைப்புத் துறைகளில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.”
“இந்தியத் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படும் சில முயற்சிகள் மற்றும் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து துணை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். குறிப்பாகஇ திருகோணமலை எரிசக்தி மையம் மற்றும் இந்தியா – இலங்கை எரிபொருள் குழாய் இணைப்புத் திட்டம் போன்றவை இதில் முக்கியமானவை. மேற்கு ஆசிய நெருக்கடியால் எரிசக்தி சவால்கள் அதிகரித்துள்ள நிலையில்இ இந்த இணைப்புத் திட்டங்கள் இரு நாடுகளுக்கும் பெரும் மதிப்பைக் கொடுக்கும்.”
இந்திய வெளிவிவகார செயலாளரின் கூற்றுப்படி இந்த விஜயத்தின் போது டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் மற்றும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.