இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் படி, இலங்கை தமிழ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 30 பேரைக் கொண்ட இரண்டாவது குழு, இந்தியாவில் நடைபெற்ற 10 நாள் ஆளுமை விருத்தி செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
இந்த பயிற்சி திட்டம் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் (NIRDPR), ஹைதராபாத்தில் நடைபெற்று, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மார்ச் 9 முதல் 18 வரை முன்னெடுக்கப்பட்டது.
இக்குழுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 20 பிரதிநிதிகளும், இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 10 பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர். இதற்கு முன், 2026 ஜனவரி 19 முதல் 29 வரை முதல் குழுவைச் சேர்ந்த 20 பிரதிநிதிகள் இதே திட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலந்துரையாடல்கள் மற்றும் கள விஜயங்களை உள்ளடக்கிய இந்த பயிற்சி, ஸ்திரமான அபிவிருத்தி இலக்குகளின் முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதன்படி வறுமையற்ற மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரம், ஆரோக்கியமான கிராமங்கள், குழந்தைகளுக்கு உகந்த சமூகங்கள், நீர் தன்னிறைவு, தூய்மையான மற்றும் பசுமையான சூழல், உட்கட்டமைப்பு மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு, நல்லாட்சி, பெண்கள் முன்னிலை வகிக்கும் உள்ளூராட்சி போன்ற முக்கிய துறைகள் குறித்து பிரதிநிதிகளுக்கு விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
மேலும், ஆரம்ப சுகாதார பராமரிப்பு, கல்வி, பட்ஜெட் திட்டமிடல், சூழலுக்கு உகந்த சுற்றுலா உள்ளிட்ட துறைகளிலும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.
பயிற்சியின் ஒரு பகுதியாக, பிரதிநிதிகள் பல்வேறு தளங்களுக்கு விஜயம் மேற்கொண்டனர். அவற்றில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாதி மையங்கள், கூட்டுறவு வங்கிகள், பெண்கள் தலைமையிலான பால் பண்ணைகள், விவசாய மற்றும் பழ ஆராய்ச்சி நிலையங்கள், நீலகிரி தேயிலை தோட்டங்கள் போன்றவை அடங்கும்.
இந்த செயல்திட்டம், இலங்கை மற்றும் இந்திய உள்ளூராட்சி அமைப்புகளுக்கிடையிலான நிறுவக ரீதியான தொடர்புகளை வலுப்படுத்துவதையும், அறிவுப் பகிர்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பயிற்சி திட்டம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2025 ஏப்ரலில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அறிவித்த திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டது. அதன் படி, இலங்கை அதிகாரிகளுக்கான மேம்பட்ட ஆளுமை விருத்தி பயிற்சிக்காக ஆண்டுதோறும் 700 தனிப்பயனாக்கப்பட்ட ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சி, இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.