இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குநரும் விளையாட்டுத் துறையின் பிரதான ஊக்குவிப்பாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இலங்கை வீரர்களை வியாழக்கிழமை காலை தனது தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் கௌரவித்தது.
ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் (Aichi-Nagoya) நடைபெற்ற 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் உள்ளடங்கலாக மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்று நாடு திரும்பிய இலங்கையின் பாரா தடகள வீரர்களின் சாதனைகளைப் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 26 ஆண்டுகளாக தேசிய பாராலிம்பிக் வீரர்களுக்குப் பக்கபலமாக இருந்து வரும் டயலொக், பிரதான சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் அவர்களின் விளையாட்டு இலட்சியங்களை நனவாக்குவதற்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகின்றது.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் எட்டப்பட்ட இந்த அண்மைய வெற்றியானது, தமது அபாரத் திறமைகளால் நாட்டிற்குப் பெருமை சேர்த்த இலங்கை வீரர்களின் மனவுறுதி, அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளது.
பெண்களுக்கான T47 நீளம் தாண்டுதல் போட்டியில் 5.52 மீற்றர் தூரம் பாய்ந்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற ஜனனி தனஞ்சன விக்ரமசிங்க தலைசிறந்த வீராங்கனையாகப் பிரகாசித்தார். அத்துடன், பெண்களுக்கான 200 மீற்றர் T47 ஓட்டப் போட்டியிலும் 25.80 செக்கன்களில் இலக்கை அடைந்து தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தையும் அவர் தனதாக்கிக் கொண்டார்.
ஆண்களுக்கான 1500 மீற்றர் T46 ஓட்டப் போட்டியில் 4:03.25 நிமிடங்களில் ஓடி முடித்து புதிய போட்டிச் சாதனையுடன் பிரதீப் சோமசிறி மற்றுமொரு தங்கப் பதக்கத்தை நாட்டிற்குப் பெற்றுக் கொடுத்தார்.
இலங்கையின் ஏனைய வெள்ளிப் பதக்கங்களை, ஆண்களுக்கான F42/F61/F63 குண்டு எறிதல் போட்டியில் 14.02 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பிடித்த பாலித பண்டார மற்றும் ஆண்களுக்கான 100 மீற்றர் T44 ஓட்டப் போட்டியில் 11.58 செக்கன்களில் ஓடி இப்பருவத்திற்கான தனது சிறந்த நேரத்தைப் பதிவு செய்த நுவன் இந்திக்க கமகே ஆகியோர் வென்றெடுத்தனர்.
நீச்சல் வீராங்கனை கலினா பஸ்நாயக்க, பெண்களுக்கான 400 மீற்றர் ப்ரீஸ்டைல் S9 போட்டியை 4:59.58 நிமிடங்களில் நிறைவு செய்து மற்றுமொரு வெள்ளிப் பதக்கத்தைச் சேர்த்தார்.
ஆண்களுக்கான T47 நீளம் தாண்டுதல் போட்டியில் (6.55 மீற்றர்) மொஹமட் சப்ரான், ஆண்களுக்கான 400 மீற்றர் T47 ஓட்டப் போட்டியில் (50.03 செக்கன்கள்) சமன் சுபசிங்க மற்றும் ஆண்களுக்கான 100 மீற்றர் பட்டர்பிளை (Butterfly) S9 நீச்சல் போட்டியில் (1:03.29 நிமிடங்கள்) நவீத் ரஹீம் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் உப தலைவர் ஹர்ஷ சமரநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்: “பாரா விளையாட்டுத் துறைக்கான டயலொக்கின் 26 ஆண்டுகால அர்ப்பணிப்பு, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வலுவூட்டுவதிலும், அவர்களின் திறமைகளை மெருகூட்டிக் கொள்வதற்கும், போட்டியிடுவதற்கும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்குமான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது. பாரா விளையாட்டுகளுக்கு நாம் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவு, அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டு மேம்பாட்டிற்கான எமது அர்ப்பணிப்பையும், திறமை, மனவுறுதி மற்றும் இலட்சியம் ஆகியவை ஒருபோதும் உடல் ரீதியான சவால்களால் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்ற எமது உறுதியான நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது” எனக் குறிப்பிட்டார்.
இலங்கையின் தேசிய கிரிக்கெட், கரப்பந்தாட்டம் மற்றும் Esports அணிகளின் பிரதான அனுசரணையாளராக டயலொக் திகழ்கிறது. அத்துடன், தேசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணிகளுக்கு ஆதரவளிப்பதுடன், இலங்கை ஓபன் கோல்ப் சம்பியன்ஷிப் (Sri Lanka Open Golf Championship) போட்டியின் பிரதான அனுசரணையாளராகவும் செயற்படுகிறது. மேலும், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டச் சம்பியன்ஷிப் மற்றும் பாடசாலை ரக்பி சுற்றுப்போட்டிகளுக்கும் நிறுவனம் அனுசரணை வழங்குகிறது. தேசிய ஒலிம்பிக் குழுவுடனான தனது கூட்டாண்மையின் ஊடாக, லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கையின் முன்னாயத்தங்களுக்கு டயலொக் தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும்.