சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் இளைஞன் அனோஜன் சிவராஜாவிற்கு சவுதி அரேபிய பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது
அனோஜனின் மேல்முறையீட்டை சமீபத்தில் செவிமடுத்த சவுதி அரேபிய உயர்நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனையை மரண தண்டனையாக அதிகரித்துள்ளதை தேசிய மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அறிந்துள்ளோம்.
சவுதி அரேபியாவின் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதை நாங்கள் அறிந்துள்ளோம்.
முகநூலில் பதிவிட்ட கருத்து தவறானது என்பதை உணர்ந்து அதனை உடனடியா திரும்ப பெற்று மன்னிப்பு கோரிய அனோஜனின் நன்நடத்தையை கருத்தில் கொள்ளவேண்டும்.
அனோஜன் நன்நடத்தை கொண்டவர் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் எண்ணம் அவருக்கு இருந்ததில்லை.
எனவே சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட இந்த துரதிஸ்டவசமான நபரை எவ்வித தண்டனையிலிருந்தும் காப்பாற்றி,இஸ்லாத்தின் உண்மையான வழிகாட்டலின் கீழ் அவரது உயிரை காப்பாற்ற உதவுமாறு மேன்மைதங்கிய தங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்,இந்த வேண்டுகோளானது நபிகள் நாயகத்தின் போதனைகள் மற்றும் இரக்கத்திற்கு அமைவானது எனஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
செல்வம் அடைக்கலநாதன்,ஜீவன் தொண்டமான்,ரவூப் ஹக்கீம்,உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்