சென்னை: கடந்த 2019-ஆம் ஆண்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி கம்பன் கலை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘கல்விக்கு எதிரான சனாதன கொள்கை’ குறித்துத் திருமாவளவன் ஆற்றிய உரை, வெறுப்புப் பேச்சாக இருப்பதாக இந்து முன்னணி பொதுச் செயலாளர் டி.என்.கண்ணன் அளித்த புகாரின் பேரில் புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி திருமாவளவன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, “திருமாவளவன் சனாதன கொள்கை குறித்து மட்டுமே பேசினார்; யாருக்கும் எதிராக வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்தவில்லை. மேலும், 3 ஆண்டுகள் தண்டனை கிடைக்கக்கூடிய இப்பிரிவில் 6 ஆண்டுகள் தாமதமாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது சட்டப்படி செல்லாது” என்று வாதிட்டனர். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார். தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள சூழலில் இந்தத் தீர்ப்பு விசிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Thirumavalavan #VCK #MadrasHighCourt #CaseQuashed #SanatanaDharma #TamilPolitics #LegalVictory #BreakingNews #ChennaiNews #PuducherryPolice #JusticeJayachandran #FreeSpeech #VCKNews #ThalaivarThiruma #TamilNaduPolitics #April30