விழுப்புரம்
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் (கோ-ஆப்டெக்ஸ்) 10 விற்பனையகங்களை மூடும் முடிவை மாநில அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு”:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் 10 கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் கடைகள், வருவாய் வீழ்ச்சி மற்றும் ஆள்குறைப்பு என்ற பெயரில் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. ஒருகாலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் விருப்பமான ஆடையகமாக இருந்த கோ-ஆப்டெக்ஸ் தற்போது திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகிறது,” என வேதனை தெரிவித்துள்ளார்.
“வெற்றித் தறி ஷோரூம்கள் என்னாச்சு?”:
தொடர்ந்து தவெக அரசை விமர்சித்த அவர், “2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் (எண். அறம் 2(8)), ‘முக்கிய நகரங்களில் வெற்றித் தறி ஷோரூம்கள் அமைக்கப்படும், சர்வதேச அளவில் இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்’ எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், புதிய கடைகளைத் திறப்போம் எனக் கூறிவிட்டு, இருக்கும் கடைகளையும் மூடுவது தவெகவின் சொல்லுக்கும் செயலுக்குமான முரண்பாட்டையே அப்பட்டமாகக் காட்டுகிறது,” என்று சரமாரியாகக் குற்றம் சாட்டினார்.
“கோ-ஆப்டெக்ஸைக் காக்க நடவடிக்கை தேவை”:
மேலும், “தவெக ஆட்சிக்கு வந்தால் வாழ்க்கை மேம்படும் என நெசவாளர்கள் முழுமையாக நம்பினார்கள்; அவர்களை அரசு ஏமாற்றக் கூடாது. எனவே, 10 கடைகளை மூடும் முடிவைக் கைவிடுவதோடு, புதிய நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்குப் புத்துயிரூட்டத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
#AnbumaniRamadoss #PMK #Cooptex #TVKGovernment #ChiefMinisterVijay #JosephVijay #HandloomWeavers #TNPolitics #TamilNaduNews #VillupuramNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates