வடிகாலமைப்பு அமைப்புகளைத் தடுத்து நிறுத்தி, கொழும்பின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக் காரணமாக அமையும் கட்டடங்களுக்கு எதிராகச் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபை (CMC) எச்சரித்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் நீர்ப்பவழங்கல் மற்றும் வடிகாலமைப்புப் பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க இது குறித்துத் தெரிவிக்கையில், மட்டக்குளி – ஸ்ரீ விக்ரம வீதி மற்றும் பிமல்வத்தை வீதி ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட சில சட்டவிரோத கட்டடங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதேபோன்று, அத்தகைய அநதிகாரக் கட்டடங்கள் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஏனைய இடங்களுக்கும் அறிவித்தல்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மாநகர சபை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமாக அமையும் வடிகாலமைப்புத் தடைகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான தொடர்ச்சியான நடவடிக்கைகளைக் கொழும்பு மாநகர சபை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.