பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கிடைத்துவந்த முறைப்பாடுகளையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் விசேட விசாரணைக் குழுவினர் வியாழக்கிழமை வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 34 பாடசாலைகளில் ஒரே நேரத்தில் அதிரடி திடீர் கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும் பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் கௌரவ ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த விசேட குழு அண்மையில் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டச் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்குத் தொடர்ச்சியாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இம்முறைப்பாடுகளின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கும் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிப்பதற்கும் கௌரவ ஆளுநர் குறித்த விசேட குழுவிற்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கமைவாக இக்குழுவினர் இன்று காலை வவுனியா மற்றும் கிளிநொச்சியில் தலா 06 பாடசாலைகள் மன்னார் மற்றும் முல்லைத்தீவில் தலா 07 பாடசாலைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் 08 பாடசாலைகள் என வடக்கு மாகாணம் முழுவதும் 34 பாடசாலைகளில் ஒரே நேரத்தில் களமிறங்கினர். இதன்போது உணவு வழங்கல் செயற்பாடுகள் உணவு தயாரிக்கப்படும் முறை அங்கு பேணப்படும் சுகாதாரத் தரநிலைகள் மற்றும் அது தொடர்பான உரிய ஆவணப் பேணுகைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆழமான கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக இந்தக் கள ஆய்வுகளில் கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய விசேட அவதானிப்பு அறிக்கையை இக்குழுவினர் கௌரவ ஆளுநரிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.