வடக்கு மாகாணத்தில் 193 ஆசிரியர்களை ஒரே நேரத்தில் “சேவையில் தேவை” என்ற அடிப்படையில் மாற்றல் செய்வது நிர்வாக கொள்கைகளுக்கும், ஸ்தாபன முறைமை அத்தியாயம் 3.2 மற்றும் 11 விதிகளுக்கும் முரணானது என சுட்டிக்காட்டி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) தலைவர் — ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய — இந்த இடமாற்றத்தை உடனடியாக நிறுத்துமாறு இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பொது சேவை ஆணைக்குழு விதிகளின் பிரிவு 267-ன் கீழ் மேல்முறையீடு செய்யும் சட்ட உரிமை உண்டு; அந்த மேல்முறையீடுகள் தீர்வு காணப்படும் வரை, தேசிய ஆசிரியர் மாற்றல் கொள்கை (2007/20) அவர்களை தற்போதைய நிலையத்தில் தொடர அனுமதிக்க வேண்டும்.
ஆனால் அதிகாரிகள் மேல்முறையீடுகளை தீர்க்காமல், ஆசிரியர்கள் புதிய நிலையத்தில் சேர்ந்த பின்னரே மேல்முறையீடுகளை பரிசீலிப்போம் என கட்டாயப்படுத்தினர்.
இந்த நிலைப்பாடு 30.03.2026 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையிலும் வலியுறுத்தப்பட்டது.
வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு இறுதி தீர்வு வழங்கப்படும் வரை இந்த மாற்றல் உத்தரவுகளை நிறைவேற்றக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுHRC சட்டம் எண் 21 பிரிவு 27-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் அது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதற்கு இணையாகக் கருதப்படும்.