ஏப்ரல் 29, 2026
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் (HR defenders) தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களது உரிமைகள் மீறப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.
கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
-
தனித்துவமான சவால்கள்: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண் மனித உரிமைப் செயற்பாட்டாளர்கள்தனித்துவமான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆயுத மோதல்கள் காரணமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், நிலம் தொடர்பான பிணக்குகள், முன்னாள் போராளிகளின் நிலை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் போராட்டங்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு போன்ற நீடித்த சவால்கள் நிலவுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
செயற்பாடுகளுக்குத் தடை: இந்த பெண் செயற்பாட்டாளர்கள் சமூகப் பணி, சமூக ஈடுபாடு மற்றும் போராட்டங்கள் மூலம் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயல்கின்றனர். இருப்பினும், அவர்களது முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் சவால்கள், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு அவர்கள் வழங்கும் சேவைகளையும் ஆதரவையும் எதிர்மறையாகப் பாதிக்கின்றன.
-
தடைக்கற்கள்: பாலின அடிப்படையிலான வன்முறை (GBV), கலாச்சார மற்றும் சமூக இழிவுபடுத்தல், வளப் பற்றாக்குறை மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளின் தவறான நடத்தை போன்ற பல்வேறு தடைகளை இவர்கள் எதிர்கொள்கின்றனர்.
-
அதிகாரிகளின் தலையீடு: கடந்த ஆண்டில் (2025) குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (CTID) அதிகாரிகளின் தலையீடுகள் கவலைக்குரிய வகையில் அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
-
உரிமை மீறல்கள்: சிந்தனை சுதந்திரம், மத சுதந்திரம், கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்று கூடும் உரிமை மற்றும் சட்டப்பூர்வமான தொழிலை மேற்கொள்ளும் உரிமை போன்ற அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் புகார்கள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.