தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு சிறப்பான வேடத்தில் நடித்திருக்கும் ‘லாலிபொப் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் கே. ஆர் .செந்தில்நாதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கும் ‘லாலிபொப் ஸ்போர்ட்ஸ் அகாதெமி’ திரைப்படத்தில் யோகி பாபு, மஞ்சுநாத், ரெடின் கிங்ஸ்லி, ரக்ஷிதா மகாலட்சுமி, யாஷிகா ஆனந்த், வை. ஜி. எம். மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஷிஹாப் பட்டம்பி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜா மணி இசையமைக்கிறார். விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மையத்தின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை காவியா புரொடக்ஷன்ஸ்- எஸ் 2 மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் மஞ்சுநாத் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பிற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் சட்டத்தரணிகள் சிவ ராம கிருஷ்ணன் & தெய்வசிகாமணி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” விளையாட்டு – விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மையம் – இவற்றின் பின்னணியில் நகைச்சுவையும், குடும்பத்தினர் அனைவரும் விரும்பும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்களும் கலந்து இப்படம் தயாராகிறது ” என்றார்.