ண்டன் மற்றும் மிடில்செக்ஸ் சமூக வீட்டுவசதி (London & Middlesex Community Housing) குடியிருப்பில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால், ஒரு தளம் முழுவதுமாக வெளியேற்றப்பட்டதுடன் ஒன்பது பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
லண்டனில் உள்ள 241 சிம்கோ ஸ்ட்ரீட்டில் (Simcoe Street) அமைந்துள்ள 12 மாடி கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் தீ பிடித்திருப்பதாக, காலை 6:30 மணியளவில் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
லண்டன் தீயணைப்புப் படைத் தளபதி கொலின் ஷெவெல் (Colin Shewell) கூறுகையில், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தியதுடன், குடியிருப்புகளில் இருந்த பலரை மீட்டனர். ஆறாவது தளத்தில் வசிப்பவர்கள் தரைத்தளத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவர்களுக்கு முதலுதவி மருத்துவக் குழுவினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
“தீ ஒரு வீட்டிற்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது, இருப்பினும் ஆறாவது தளம் முழுவதும் புகையினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று ஷெவெல் தெரிவித்தார்.
முன்னதாக, ஒரு குழந்தை உட்பட நால்வர் சீரான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மற்ற ஐவர் கவலைக்கிடமான நிலையில் கொண்டு செல்லப்பட்டதாகவும் மிடில்செக்ஸ்-லண்டன் மருத்துவ சேவை (Middlesex-London Paramedic Service) தெரிவித்தது.
மருத்துவமனைக்குச் செல்லாத மற்றும் தங்குமிடம் தேவைப்படும் ஆறாவது தள குடியிருப்பாளர்கள், கார்லிங் ஹைட்ஸ் சமூக மையத்திற்கு (Carling Heights Optimist Community Centre) அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 15 குடியிருப்பாளர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) மூலம் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட உள்ளது. தீ விபத்து நிகழ்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மற்ற தளங்களில் வசிப்பவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக ஒன்டாரியோ தீயணைப்புத் துறை அதிகாரிகளும் (Ontario Fire Marshal) நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் தீ அணைக்கப்பட்ட பிறகு, கட்டிடத்தின் இரண்டாவது மாடி பால்கனியில் மற்றொரு சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கும் முதல் விபத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கட்டிடத்தில் 19 குடியிருப்புகள் உள்ள நிலையில், தற்போது கட்டிடத்தின் மின்சாரம் மற்றும் இதர கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.