தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலர் “அரச காணி” என அறிவித்து, அதிலிருந்து உரிமையாளரை வெளியேறுமாறு அறிவிப்பு விடுத்திருந்தார்.
அந்த அறிவிப்பை எதிர்த்து காணி உரிமையாளர் ஆவணங்கள் கோரியும், அவை வழங்கப்படாததால் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையின்போது காணி அளவீட்டுத் திணைக்களம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், யாழ்ப்பாணம் காணிப் பதிவகம், விவசாய அமைச்சு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மூலம், அந்தக் காணி அரசால் சுவீகரிக்கப்படவில்லை என்றும் தனியார் காணியாகவே பதிவாகியுள்ளது என்றும் உறுதியானது.
இதன் அடிப்படையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 15 அன்றைய வெளியேற்றல் அறிவிப்பை ரத்து செய்து உறுதிகேள் எழுத்தாணை பிறப்பித்தது. மேலும், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள தொடர்புடைய வழக்கில் மனுதாரர்களுக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் தடையீட்டு உத்தரவையும் பிறப்பித்தது