யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் வெதுப்பக (Bakery) உற்பத்திப் பொருட்களை விற்பனைக்காக ஏற்றிச் சென்ற நான்கு வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது இந்த வாகனங்கள் சிக்கின.
சிக்கிய வாகனங்கள்: கடைகளுக்குப் பொருட்களை விநியோகித்த இரண்டு வாகனங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று விற்பனை செய்த இரண்டு முச்சக்கர வண்டிகள் என மொத்தம் 4 வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களைக் கையாளுதல் மற்றும் விநியோகிப்பதில் உரிய சுகாதார விதிமுறைகளை அவர்கள் பின்பற்றவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களிலும் வலி. தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிலையங்களில் இத்தகைய திடீர் சோதனைகள் தொடரும் என்றும், விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவிசாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.