கிருஷ்ணகிரி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை உடனடியாகக் கட்ட வலியுறுத்திக் கர்நாடகா முழுவதும் இன்று கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையிலும், ஓசூர் வழியே தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
பேருந்துகள் தடையின்றி இயக்கம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான அரசுப் பேருந்துப் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலத்தின் அத்திப்பள்ளி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குத் தமிழக அரசுப் பேருந்துகளும், கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழகப் (KSRTC) பேருந்துகளும் வழக்கம்போல் வந்து செல்கின்றன.
பயணிகள் கூட்டம் குறைவு:
போராட்டம் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இரு மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களைத் தவிர்த்து வருகின்றனர். இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு:
கடந்த 10-ஆம் தேதி கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் அத்திப்பள்ளி பகுதியில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்களைத் தடுத்து நிறுத்திப் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக எல்லையோரப் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஓசூர் ஜூஜூவாடி எல்லைச் சோதனைச் சாவடியில் காவல்துறை பாதுகாப்பு தீவிரமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
#MekedatuIssue #KarnatakaBandh #MekedatuDam #Hosur #Krishnagiri #TNSTC #KSRTC #HosurBorder #TamilNaduNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates