வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள “முரசு” (Murasu) சூறாவளி தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று (2) பிற்பகல் முதல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறித்த சூறாவளி, நேற்று (1) இரவு 11.30 மணியளவில் காங்கேசன்துறைக்கு வட-வடகிழக்கே சுமார் 480 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இந்த சூறாவளி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த சில மணித்தியாலங்களில் தீவிர சூறாவளிப் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் சூறாவளி, இன்று நள்ளிரவுக்கும் நாளை (3) அதிகாலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியான நெல்லூருக்கும் நர்சாபூருக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10°N முதல் 17°N வரையிலும், 80°E முதல் 90°E வரையிலும் உள்ள ஆழ்கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரை மீனவர்களும் கடற்படையினரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குத் திரும்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமற்ற மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கும் மறுஅறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், தென்மேற்கு அல்லது தெற்கு திசையிலிருந்து மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.