மக்கள் தங்களது மக்கள் ஆணையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிறிசேன மைதானத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) ஏற்கனவே ஒன்றிணைந்துவிட்டதாகவும், கூட்டு முயற்சியாக முன்னோக்கிச் செல்லத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை எளிதாக்க குழுவொன்றை நியமிக்குமாறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், கூட்டணி ஏற்கனவே வலுவாக உருவாகியுள்ளதால் அத்தகைய நடவடிக்கை இனி தேவையில்லை என பிரேமதாச சுட்டிக்காட்டினார். அத்துடன், இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒற்றுமையைக் குலைக்கச் சிலர் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், அத்தகைய முயற்சிகள் வெற்றிபெற இடமளிக்கப்போவதில்லை என்றும் வலியுறுத்தினார்.
தனது உரையின் போது, பொருளாதார முகாமைத்துவம், ஆட்சி முறை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தைத் கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர், பொது நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண வேண்டியது நாட்டின் அவசரத் தேவை என அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக மாற்றுத் திட்டமொன்றை முன்வைக்கத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டைக் கட்டியெழுப்பவும், மிகவும் பயனுள்ள ஆட்சி முறையை வழங்கவும் ஏனைய முற்போக்கு சக்திகளுடன் இணைந்து எதிர்க்கட்சி தொடர்ந்து பணியாற்றும் என்றும் பிரேமதாச தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரிய அவர், அரசாங்கம் ஜனநாயக ரீதியிலான இந்தச் செயல்பாட்டைத் தாமதப்படுத்தக் கூடாது என்றும், மக்கள் தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.