இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது, ‘டித்வா’ சூறாவளிக்குப் பிந்தைய மறுசீரமைப்பிற்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகை அறிவிக்கப்பட்டது. இந்த உதவித் தொகையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வினய் தாக்கூர் தலைமையிலான Bhaskaracharya Institute of Space Applications and Geoinformatics (BISAG) பிரதிநிதிகள் குழு மார்ச் 9 முதல் 20 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது.
அவர்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்துடன் இணைந்து, ‘PM Gati Shakti’ திறந்த மூல கட்டமைப்பின் அடிப்படையில் இயங்கும் ஒரு புவியியல் (Geospatial) தளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தளம் பேரிடர் தாக்க மதிப்பீடு செய்வதோடு மட்டுமல்லாது, அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகவும் செயல்படும்.
மேலும், இந்திய தொலைத்தொடர்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான Centre for Development of Telematics (C-DoT) பிரதிநிதிகள் குழு மார்ச் 16 முதல் 20 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, மொபைல் ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரம்ப எச்சரிக்கை (Early Warning) முறைமைக்கான Proof of Concept-ஐ வெற்றிகரமாக காட்சிப்படுத்தியுள்ளது.
அதேவேளை, Geological Survey of India சார்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நிலச்சரிவு எச்சரிக்கை முறைமைகள் மற்றும் புவியியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொண்டனர். அவர்கள் தேசிய கட்டிட ஆராய்சி நிலைய அதிகாரிகளுடனும் சந்தித்து சிறந்த நடைமுறைகள் குறித்து பரிமாறிக் கொண்டனர்.
இந்த சந்திப்புகளின் நிறைவாக, பேரிடர் தாக்க மதிப்பீட்டு தளமும், மொபைல் அடிப்படையிலான ஆரம்ப எச்சரிக்கை முறைமையும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, எரங்க வீரரத்ன, ஹன்ஸ் விஜயசூரிய உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.
இரு நாடுகளும், எதிர்காலத்தில் இத்திட்டங்களை மேலும் மேம்படுத்தி, திறன் வளர்ப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சிறந்த நடைமுறைகள் பகிர்வு ஆகியவற்றின் மூலம் பேரிடர் முகாமைத்துவ திறன்களை வலுப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளன.