திங்கட்கிழமை பிற்பகல் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் உள்ள தொழில்சார் வளாகம் ஒன்றின் கட்டுமானப் பள்ளத்தில் (Construction hole) விழுந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.
குவீன் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதிக்குச் சற்று தெற்கே, கிளாரன்ஸ் ஸ்ட்ரீட் அருகிலுள்ள கென்னடி ரோட் சவுத் (Kennedy Road South near Clarence Street) பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொழில்துறை விபத்து (Industrial accident) ஒன்று நேர்ந்துள்ளதாகப் பிற்பகல் 4:00 மணிக்குச் சற்று முன்னதாகக் கிடைத்த புகாரையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இது குறித்துப் பொலிஸார் சிடிவி நியூஸ் (CTV News) செய்திச் சேவைக்குத் தெரிவிக்கையில், “சம்பவ இடத்திற்கு முதற்பதிலளிப்பவர்கள் விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரைக் காப்பாற்றத் தங்களால் இயன்றவரை முயன்றனர். எனினும், அவர் பரிதாபகரமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பீல் பிராந்திய அவசர மருத்துவ உதவிச் சேவையினரும் (Paramedic Services) சம்பவ இடத்திற்குச் சென்று ஒருவரைப் பரிசோதித்த போதிலும், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
தற்போது விபத்து நடந்த பகுதி பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒன்டாரியோ தொழிலாளர் அமைச்சகம் (Ontario Ministry of Labour) முன்னெடுத்து வருகின்றது.