யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலப்பரப்புக்குள் உள்ளடங்கியுள்ள, வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதியை விடுவிக்குமாறு கோரி, விகாராதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் மே 11-ஆம் திகதிக்கு முன்னர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீதியை விடுவிக்கத் தவறினால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என இந்தக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1987-ஆம் ஆண்டின் 15-ஆம் இலக்க பிரதேச சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ், சபைக்குச் சொந்தமான வீதியை மறித்து எல்லை இட்டுள்ளமையை அகற்றக் கோரி உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியைச் சேர்த்து எல்லையிட்ட இடப்பரப்பிற்கான உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை மே 11-ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச சபையிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விகாரை நிர்வாகம் எல்லைகளை அகற்றத் தவறினால், சட்டப்பிரிவு 59(2)-இன் படி பிரதேச சபையே அவற்றை அகற்றும். அதற்கான செலவுத் தொகை விகாராதிபதியிடமிருந்தே அறவிடப்படும்.
இந்த உத்தரவை மீறினால் விகாரை நிர்வாகம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் இவ்விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. தவிசாளரின் இந்த நடவடிக்கைக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்கள் உட்பட சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாகத் தமது ஆதரவை வழங்கியுள்ளனர். இக்கடிதத்தின் பிரதிகள் யாழ். மாவட்ட செயலர் மற்றும் பலாலி காவற்துறைப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.