காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை வடக்குக்கு மட்டுமல்ல, தெற்கில் இருப்பவர்களுக்கும் பிரச்சினையாகக் காணப்படுகிறது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில் நடைபெற்ற காணாமல் போனோர் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
“நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது; பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். நாட்டு மக்கள் நமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ள நிலையில், மக்கள் ஆணையை மீறும் வகையில் எமது அரசாங்கம் செயற்படாது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் நீண்ட காலமாகப் புரையோடிப்போயுள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாங்கள் அதிகாரத்திற்கு வந்த பின் வார்த்தைகளால் மட்டும் சொல்லவில்லை; நடைமுறையில் பல விடயங்களைச் செய்துள்ளோம்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காகச் சுமார் 57 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதேபோல், கடந்த காலங்களில் காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் மந்தமான நிலையில் நடைபெற்றமைக்கு உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையே காரணமாக அமைந்தது. அதனைக் கருத்திற்கொண்டு, தற்போது அதற்கான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வழங்கியுள்ளோம்.
காணாமல் போனோர் அலுவலகத்தில் (OMP) வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை இயன்றவரை அடுத்த வருடம் முழுமையாக விசாரணை செய்து, மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம். ஆகவே, செம்மணி தொடர்பில் தேவையற்ற வதந்திகளை நம்பத் தேவையில்லை; எமது அரசாங்கம் நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி உண்மையை கண்டறியும் செயற்பாடுகளை ஒருபோதும் நிறுத்தாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.