தொழில்நுட்பமும் அதனுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்களும் எந்தவொரு தனி நிறுவனத்தினாலும் அல்லது அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தினாலும் ஈடுகொடுக்க முடியாத வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன. எமது திரைகளில் எத்தகைய தகவல்கள் தோன்ற வேண்டும் என்பதை அல்கோரிதங்கள் தீர்மானிக்கின்றன. ஆனால், அல்கோரிதங்கள் வாக்களிப்பதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அமீர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.
‘தவறான தகவல்களுக்கு எதிரான மீள்திறனை வலுப்படுத்துதல்’ (Strengthening Resilience Against Disinformation) என்ற திட்டத்தின் கீழ், ‘அல்கோரிதத்திற்கு அப்பால்’ (Beyond the Algorithm) எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று கொழும்பு சினமன் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ‘தவறான தகவல்களும் தேர்தல் நேர்மையும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அமீர் பாயிஸ் மேலும் தெரிவித்ததாவது:
‘அல்கோரிதத்திற்கு அப்பால்’ என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானது. ஏனெனில், சில சந்தர்ப்பங்களில் எதை வெளிப்படுத்துவது, எதை வெளிப்படுத்தாமல் இருப்பது என்பதைத் தீர்மானிக்கும் வாய்ப்புக்கூட சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இல்லாமல் போகிறது. எமது திரைகளில் எத்தகைய தகவல்கள் தோன்ற வேண்டும் என்பதை அல்கோரிதங்கள் தீர்மானிக்கின்றன. ஆனால், அல்கோரிதங்கள் வாக்களிப்பதில்லை.
ஒவ்வொரு திரைக்குப் பின்னாலும் ஒரு குடிமகன் இருக்கிறார். ஒவ்வொரு வாக்கிற்குப் பின்னாலும், அந்தக் குடிமகன் வாசித்த, கேட்ட மற்றும் உண்மை என நம்பிய தகவல்களின் அடிப்படையில் உருவாக்கிக்கொண்ட ஒரு தீர்மானம் இருக்கிறது.
அந்தத் தீர்மானத்தின் தரம் எத்தகையதாக இருக்கிறது என்பதும், அத்தகைய தீர்மானம் உருவாகும் சூழல் எவ்வாறு அமைகிறது என்பதை கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானது.
ஜனநாயகம் ஒரு வாக்குறுதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, குடிமக்கள் தங்களது விருப்பப்படி சுயாதீனமாக தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், அந்தத் தெரிவுகள் போதிய தகவல்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும். தவறான தகவல்கள் இந்த வாக்குறுதியை அமைதியாகச் சிதைக்கின்றன.
வாக்களிப்பு நிலையத்தின் நுழைவாயிலில் ஒரு வாக்காளரைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் தவறான தகவல்கள் செயற்படுவதில்லை. மாறாக, அதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கையடக்கத் தொலைபேசி ஊடாகவும், மற்றவர்களால் பகிரப்படும் செய்திகளின் ஊடாகவும், திரிபுபடுத்தப்பட்ட புகைப்படங்கள் அல்லது போலியாக உருவாக்கப்பட்ட காணொளிகள் மூலமாகவும் அவை வாக்காளர்களைச் சென்றடைகின்றன. பல சந்தர்ப்பங்களில், உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதற்கு முன்னரே இத்தகைய தகவல்கள் பரவிவிடுகின்றன. அதனால்தான், தவறான தகவல்கள் என்பது வெறுமனே ஒரு தகவல் தொடர்பாடல் பிரச்சினை மாத்திரமல்ல. அது தேர்தல் ஒருமைப்பாட்டுக்கே சவாலாக அமைகிறது.
ஒரு தேர்தல் எந்தவிதமான குறைபாடுகளுமின்றி நிர்வகிக்கப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு வாக்கும் முறையாகச் செலுத்தப்பட்டு, சரியாக எண்ணப்பட்டிருக்கலாம். இருப்பினும், உண்மையைவிட வேகமாகப் பரவும் ஒரு பொய்யான தகவல், தேர்தல் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கக்கூடும்.
இலங்கையில் குறுகிய கால இடைவெளியில் தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று முக்கிய தேர்தல்களின்போதும் நாம் இதனை அவதானித்துள்ளோம். குறிப்பாக, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகியவற்றின்போது, தேர்தல் நடைமுறைகள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முடிவுகள் தொடர்பாகப் பரப்பப்பட்ட தவறான தகவல்கள் எவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தி, பொதுமக்களின் நம்பிக்கையைச் சோதனைக்கு உட்படுத்தின என்பதை நாம் அவதானித்தோம்.
நல்ல முயற்சிகள் ஒருபோதும் தற்செயலாக உருவாவதில்லை. தேர்தல் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான போட்டி டிஜிட்டல் தளங்களுக்கும் விரிவடைந்து வருகின்றது என்ற புரிதல் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள்ளேயே உருவானது.
எமது முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தனது தொலைநோக்குப் பார்வையுடன் இந்தப் புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். இந்த ஒத்துழைப்புக்கு அடித்தளமிட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளையும் அவரே முன்னெடுத்தார்.
2024ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழு முன்வைத்த பரிந்துரைகளையும் அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் தவறான தகவல்களுக்கு எதிரான மீள்திறனை வலுப்படுத்தும் திட்டம் (Strengthening Resilience Against Disinformation in Sri Lanka – SRADS) உருவாக்கப்பட்டது.
அவரது தொலைநோக்குப் பார்வைக்கும் தலைமைத்துவத்திற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் ஊடாகப் பல முக்கியமான முன்னேற்றங்களை எம்மால் அடைய முடிந்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் 74 உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் கண்காணிப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 42 கணினிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அத்துடன், Meta Content Library மற்றும் YouTube Data Interface ஆகியவற்றுக்கான ஆய்வு அணுகலைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2025 மார்ச் மாதத்தில், Meta நிறுவனத்துடன் கலந்துரையாடுவதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று சிங்கப்பூருக்குச் சென்றது. இதன் விளைவாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் Meta நிறுவனத்துக்கும் இடையில் முறையான ஒத்துழைப்புக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.
2025 டிசம்பர் மாதத்திற்குள், ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் வழிமுறைகள் ஊடாக 900 இற்கும் மேற்பட்ட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முறைப்பாடுகள் தொழில்நுட்பத் தளங்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன. மேலும், ஆணைக்குழுவினால் மேல்நிலைப்படுத்தப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் உள்ளடக்கங்கள் நீக்கப்பட்ட விகிதம் 15.2 சதவீதத்திலிருந்து 20.3 சதவீதமாக அதிகரித்தது.
2026 ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது விஜயத்தின் ஊடாக, எதிர்காலத் தேர்தல்களை முன்னிட்டு கூகுள் உள்ளிட்ட ஏனைய தொழில்நுட்ப நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களும் விரிவுபடுத்தப்பட்டன.
இந்தத் திட்டத்தின் ஊடாக அடையப்பட்ட முன்னேற்றங்கள், 2026 முதல் 2029 வரையிலான தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்கேற்பு அடிப்படையிலான மூலோபாயத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.
Democracy Reporting International (DRI) மற்றும் FACTUM அமைப்புகளின் ஆதரவுடன், தவறான தகவல்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்கள் தொடர்பான மூலோபாயச் செயல் திட்டமொன்றைத் தயாரித்து வருகிறோம். அதேவேளை, ஆணைக்குழுவின் டிஜிட்டல் திறன்களை மதிப்பீடு செய்து, அதன் டிஜிட்டல் செயற்பாடுகளுக்கான எதிர்காலப் பாதையை வகுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
வாக்காளர்களைப் பாதுகாப்பதே எமது நோக்கமே தவிர, அவர்களின் கருத்துக்களைக் கட்டுப்படுத்துவது அல்ல. நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றுடன் இணக்கமானதாக இருக்க வேண்டும்.
தேர்தல் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது என்ற பெயரில் நியாயமான அரசியல் விவாதங்களையோ விமர்சனங்களையோ அடக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. தேர்தல்கள் ஆணைக்குழு மீதான விமர்சனங்களும் இதில் உள்ளடங்குகின்றன.
தேர்தல் ஒருமைப்பாடு என்பது இறுதியில் திறமையான, வினைத்திறனான மற்றும் சுயாதீனமான தேர்தல்கள் ஆணைக்குழுவிலேயே தங்கியுள்ளது. இந்த மூன்று பண்புகளும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை.
நிறுவனத்தின் ஆற்றலால் ஆதரிக்கப்படாத சுயாதீனம் பலவீனமானது. வினைத்திறனுடன் பயன்படுத்தப்படாத ஆற்றல் வீணானது. அதேவேளை, சுயாதீனமற்ற வினைத்திறன் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியாது.
தேர்தல்கள் ஆணைக்குழு உயர்ந்தளவிலான நம்பகத்தன்மையையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. எனினும், இந்த நம்பிக்கையை நிரந்தரமான ஒன்றாகவோ அல்லது எப்போதும் உறுதியாக இருக்கும் ஒன்றாகவோ நாம் கருதவில்லை. தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதுடன், அதனால் உருவாகக்கூடிய சவால்களும் அதிகரித்து வருகின்றன. எனவே, பொதுமக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து பேணுவதுடன், அதனை மேலும் வலுப்படுத்தவும் நாம் உறுதிபூண்டுள்ளோம்.
எனினும், இந்தப் பணியைத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. தொழில்நுட்பமும் அதனுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்களும் எந்தவொரு தனி நிறுவனத்தினாலும் அல்லது அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தினாலும் ஈடுகொடுக்க முடியாத வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன.
எனவே, பங்காண்மைகள் மிகவும் அவசியமானவை. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கை மற்றும் ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட ஏனைய நட்பு நாடுகளும் நலன்விரும்பிகளும் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
இந்தத் திட்டத்தின் பங்காளிகளான DRI மற்றும் FACTUM அமைப்புகள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நெருக்கமாக அவதானித்துள்ளன. ஆணைக்குழுவின் பலங்களையும் அதன் ஆற்றல்களையும் அவை நன்கு அறிந்துள்ளன.
எட்டு மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மூன்று தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காக, இரவு பகலாகப் பணியாற்றிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பையும் அவர்கள் நேரடியாகக் கண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.
ஆணைக்குழுவின் சுதந்திரத்தை மதித்து, அதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவு, அதன் வினைத்திறனை அதிகரிப்பதுடன், பொதுமக்களின் நம்பிக்கையையும் ஜனநாயகத்தையும் மேலும் வலுப்படுத்தும்.
அடுத்த மாதம் இந்தத் திட்டம் உத்தியோகபூர்வமாக நிறைவடையவுள்ள போதிலும், எமது பணிகள் அதனுடன் முடிவடையப் போவதில்லை. காலத்திற்கேற்றதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான பொதுத் தகவல்களை வழங்குதல், தேர்தல் காலங்களில் ஊடக மற்றும் டிஜிட்டல் தயார்நிலையைத் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்தல், தேர்தல் காலம் முழுவதும் சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத் தளங்களுடன் நடைமுறை ஒத்துழைப்பை முன்னெடுத்தல் ஆகியவற்றைத் தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்து மேற்கொள்ளும்.
இந்த நடவடிக்கைகள் வாக்களிப்பு தினத்திற்கு முந்தைய சில வாரங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், முழுத் தேர்தல் சுழற்சியிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் இல்லாதிருப்பதுதான் வலுவான ஜனநாயகத்தின் அடையாளம் அல்ல. மாறாக, பல்வேறு கருத்துக்களுடன் மக்கள் ஈடுபடுவதற்கும், தகவல்களை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வதற்கும், திட்டமிட்ட ஏமாற்று நடவடிக்கைகளால் தங்களது தீர்மானங்கள் பாதிக்கப்படாமல் சுதந்திரமாகத் தெரிவுகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பளிக்கும் ஆற்றலே வலுவான ஜனநாயகத்தின் உண்மையான அடையாளமாகும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில், ஐரோப்பிய ஒன்றியம், Democracy Reporting International, FACTUM, சிவில் அமைப்புகள், ஊடக நண்பர்கள் மற்றும் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.