தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதியில் உங்கள் காணிகள் எல்லைப்படுத்தப்பட்டிருந்தால் அனைவரும் அதனை மீட்க முன்வரவேண்டும் இல்லையேல் அந்த காணிகளை விடுவிப்பதற்கு இன்னுமொரு தசாப்தகாலமாகலாம் என காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உறுதியிருந்தால் அதனை வெளிப்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது குறித்து மேலும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
எங்களிடம் 17 பேருடைய உறுதிதான் உள்ளது 17 பேரால் மாத்திரம் காணிகளை அடையாளம் காணக்கூடிய நிலையுள்ளது.
அந்த 17 பேருடைய எல்லைகளும் காண்பிக்கப்படுமிடத்து அந்த 17 பேருடைய காணிகளைதான் விடுவிக்கப்போகின்றோம் என்ற கதையொன்றை சொன்னார்கள்.
அந்த இடத்தில 150 பரப்பு காணி இருக்கும் என நாங்கள் சந்தேகின்றோம் அதற்கு கூடுதலான காணிகளும் இருக்கலாம்.ஆனால் அந்த உறுதிகள் காண்பிக்கப்படுமிடத்து அவர்களின் காணிகளைதான் விடுவிப்பதாக கூறியிருக்கின்றார்கள்.
30 வருடங்களாக நாங்கள் அந்த இடத்தில் இல்லை,தாய் தகப்பன் தவறின பிள்ளைகளுக்கு அந்த இடத்தில காணிகள் இருக்கின்ற விடயமே தெரிஞ்சிருக்காமல் இருந்திருக்கலாம் உறுதிகள் கூட அவர்களிடம் இருக்கலாமிருக்கலாம். அப்படியான காணிகளை சுவீகரிப்பு மூலமோ அல்லது வேறு எந்தவகையிலோ விகாராதிபதி கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதை கருத்தில்கொண்டு நாங்கள் கேள்வி கேட்டபோது அவ்வாறில்லை எப்போதாவது அந்த காணி உரிமையாளர்கள் உரிமை கோருமிடத்து அந்த காணிகளை அளவை செய்து விடுவிப்போம் என கூறுகின்றார்கள்.
இதன் காரணமாக தையிட்டியை சார்ந்த மக்களிடம் நான் விடுக்கின்ற கோரிக்கை என்னவென்றால் இவ்வளவு காலமும் சிலவேளை பயத்தினால் கூட நீங்கள் உறுதிகள் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
உங்களது காணிகள் அந்த விகாரை பகுதியில் எல்லைப்படுத்தப்பட்டிருந்தால் அனைவரும் உங்கள் காணிகளை மீட்க முன்வரவேண்டும்,இல்லையேல் அந்த காணிகளை விடுவிக்க இன்னுமொரு தசாப்தகாலம் செல்லக்கூடும்,இல்லாவிட்டால் அந்த பகுதியில் கூட சட்டவிரோத கட்டுமானங்கள் விகாரைகள் எழுவதற்கான வாய்ப்புள்ளது.
இந்த காணிகளை மீட்குமிடத்து அவர்கள் ஆவேசமாக நின்று மற்றகாணிகளை கைப்பற்றக்கூடும்,
இதன் காரணமாக உங்களிடம் உறுதிகள் இருந்தால் அனைவரும் அதனை வெளிப்படுத்தவேண்டும்.