சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளின் (SSR) ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 5.77 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
திருவள்ளூர் முதலிடம்:
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார். அதன்படி, மாநிலத்தில் 2,82,03,992 ஆண் வாக்காளர்களும், 2,95,34,734 பெண் வாக்காளர்களும், 7,892 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 5,77,46,618 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக 32,39,301 வாக்காளர்களுடன் திருவள்ளூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் 5,29,528 வாக்காளர்களுடன் அரியலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையரும், மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டனர்.
டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்:
பொதுமக்கள் தங்களது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா? என்பதை தற்போது சரிபார்த்துக் கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கவும், விவரங்களைத் திருத்தவும், முகவரியை மாற்றவும் முறையே படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்:
விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் நேரில் அளிக்கலாம். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். மேலும், https://voterportal.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் ECINET கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் போது, இருப்பிட முகவரி மற்றும் வயதுக்கான ஆவணங்களை (மின் கட்டண ரசீது, வங்கி கணக்குப் புத்தகம், வாடகை ஒப்பந்தம், பிறப்புச் சான்றிதழ், பான் அட்டை அல்லது மதிப்பெண் சான்றிதழ்) சுய சான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் தங்களது பெயரைச் சேர்க்கப் படிவம் 6A மூலம் நேங்கிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.