ஈரோடு:
எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தவெக அரசு முழுமையாகத் தயாராக உள்ளதாகத் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தீர்மானத்தைச் சந்திக்கத் தயார்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த காசிபாளையம் பேரூராட்சிப் பகுதியில் புதிய சந்தை வளாகம் மற்றும் புதிய சமுதாயக் கூடத்தை வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்த எண்ணங்கள் இல்லை. ஒருவேளை அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும், அதையும் சந்திக்க அரசு முழுமையாகத் தயாராக உள்ளது. பேரூராட்சிகளுக்கான பதவிக்காலம் இன்னும் பிப்ரவரி மாதம் வரை உள்ளது. அதற்குப் பிறகு அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கும்,” என்று தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை:
தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு இயக்கங்களும் புதிதாக ஆட்சிக்கு வரும்போது, சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து என்னென்ன மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவது என்பது குறித்து விரிவாக ஆலோசிப்பது வழக்கம். அந்த வகையில்தான் முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நேற்றைய கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் எந்தக் கடிதங்களும் பெற வாய்ப்பில்லை,” என்று விளக்கமளித்தார்.
பொறுமை அவசியம்:
மேலும் அவர் கூறுகையில், “தீபாவளி பண்டிகை அன்று நடைபெற்ற கொலைகள் ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட முன்விரோதம் மற்றும் மனக்கசப்புகள் காரணமாகவே நடந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று வளர்ந்து வருகிற தமிழகத்தில் கிராமம் மற்றும் நகரத்தில் வாழும் மக்களாக இருந்தாலும், தீபாவளி என்பது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு நிகழ்வாகும். ஓரிரு இடங்களில் மட்டுமே இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான அசம்பாவித நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்பட, மக்களிடையே பொறுமை இருப்பதுடன் பொறாமை உணர்வு இல்லாமல் இருக்க வேண்டும்,” என்று அறிவுறுத்தினார். இறுதியாக, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அந்த விவகாரத்திற்கு உரிய விளக்கத்தை எம்.எல்.ஏ முதலமைச்சரிடம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.