வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு இந்த அரசு நீதியினை வழங்கியே ஆக வேண்டும் என வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்ய ஆரியரத்னவிடம் வடக்கு ஊடகவியலாளர்களினால் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து எழுப்பிய சரமாரி கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாது பிரதி அமைச்சர் திணறிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (31) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பமான குறித்த செயலமர்வில் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்ய ஆரியரத்ன, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் ஹர்ச பண்டார, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி உதவி மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அரசாங்க அதிபர், பணிப்பாளர், பிரதி அமைச்சர் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதன் போது தமிழர் தாயகத்தில் கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா கூறியிருந்த போதிலும் தற்போது வரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதுள்ளமை தொடர்பில் ஏமாற்றமளிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த போது, சகல கோப்புகளும் தூசு தட்டப்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் இந்த அரசாங்கத்தின் காலத்தில் நீதி கிடைக்கும் என்பதாக பிரதி அமைச்சர் பொதுவாக பதிலளித்திருந்தார்.
குறித்த பதிலால் அதிருப்தியடைந்த ஊடகவியலாளர்கள், தொடர்ந்து கேள்விகளை கேட்டனர். வடக்கு கிழக்கில் காணப்படும் ஏனைய பிரச்சினைகளைப் போன்று ஊடகவியலாளர்களது பிரச்சினைகளும் பிரத்தியேகமானவை. யுத்தகாலத்தில் அடக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக செயற்பட்ட காரணத்தினால் தான் அவர்களுக்கு இந்த நிலை நேர்ந்தது. வடக்கில் மட்டும் 58 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலியகொட ஆகியோரின் வழக்கு விசாரணைகளில் ஆர்வம் காட்டும் இந்த அரசு படுகொலை செய்யப்பட்ட நிமலராஜன், தராக்கி சிவராம், இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில் பாரபட்சமாக செயற்பட்டு வருகிறது. என ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையில், விசாரணை அமைப்புகள் சுயாதீனமாக இயங்குகின்றன. அதில் அரசு எந்த தலையீடும் செய்யாது. அதே நேரம் தமிழர், சிங்களவர் என்ற அடிப்படையிலும் விசாரணைகளில் முன்னுரிமை காட்டப்படாது என பிரதி அமைச்சர் பதிலளித்திருந்தார். இதனையும் ஏற்க மறுத்த ஊடகவியாளர்கள், ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் கோப்புகள் தூசு தட்டப்பட்டிருந்தால் அது தொடர்பில் நாங்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடைபெறவில்லை. எப்போது விசாரணை ஆரம்பிக்கும் என விடாது கேள்வி எழுப்பியிருந்தனர்.
உடனடியாக காலத்தை குறித்து எதுவும் சொல்ல முடியாது எனவும் முன்னைய அரசாங்கங்களை விட தற்போதைய தமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இது விடயத்தில் நேர்மையாக செயற்படும் என கூறி வேறு நிகழ்வை காரணம் காட்டி செயலமர்வை முடிவுக்கு கொண்டுவர முற்பட்டார்.
இதன்போது மீண்டும் ஊடகவியலாளர் தரப்பில் குறுக்கிட்டு, லசந்த, பிரகீத் விடயங்களை போன்று தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தை விசாரித்தால் அதற்கு காரணமானவர்களாக இராணுவத்தினரும் துணை ஆயுதக் குழுவினருமே கண்டறியப்படுவார்கள். அதனால் தான் இராணுவத்திற்கு எதிராக விசாரணை செய்வதை தவிர்க்க பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை நாம் உணர்கின்றோம். ஊடக அடையாள அட்டை, சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏனைய பகுதிகளில் உள்ள ஊடகவியலாளர்களை போன்று எமக்கும் உண்டு. அதனை மறுப்பதற்கில்லை.
ஆனால் வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது சக ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும். அதை செயற்படுத்தும் பட்சத்தில் அதன் பின்னர் தான் ஊடகத்துறையின் வளர்ச்சி, முன்னேற்றம் தொடர்பில் நாம் கவனம் செலுத்த முடியும் என்பதனை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துங்கள் என ஆணித்தரமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
முன்னதாக படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் களுக்கு நீதி கோரி பிரதி அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ் ஊடக அமையத்தினர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வாயிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன் ஊடக செயலமர்வினையும் புறக்கணித்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த ஊடக செயலமர்வில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் மற்றும் யாழ் ஊடக மன்றம் ஆகிய ஊடக அமைப்புகளை சேர்ந்த 25 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்ததுடன் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கியே ஆக வேண்டும் என பிரதி அமைச்சரிடம் ஆணித்தரமாக வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.