அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் 31.07.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வரும் அரச ஊழியர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும், அதனடிப்படையில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு அதிகாரிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், மாவட்ட செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த இரு அதிகாரிகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலில், குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நோர்வூட் பிரதேச செயலாளரினால் இன்று காலை ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகத்தர்களும், 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, இவ்வூழல் மோசடியில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பில தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (1) சனிக்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.