சென்னை:
நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு அரசியலில் அவர் தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கு ஒருபோதும் போட்டியாக அமைய மாட்டார் என அமைச்சர் மரிய வில்சன் அதிரடியாகக் கூறியுள்ளார். இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் அரசியல் பிரவேசம்:
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சனிடம், தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாகப் பேசப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “”வரட்டும், மிகவும் நல்லதுதான். இது ஒரு ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் தேர்தலில் தாராளமாகப் போட்டியிடலாம்,”” என்றார். தொடர்ந்து, உங்க தலைவருக்கு அவர் போட்டியாக இருப்பாரா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குச் சட்டென முகம் மாறிய அமைச்சர், அதற்கெல்லாம் எந்தவிதமான வாய்ப்பே கிடையாது என்றும், அந்த கேள்வியை நீங்கள் உடனடியாகத் திரும்பிப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் ஆவேசமாகக் கூறினார்.
திராவிடக் கட்சிகளின் கணக்கு:
முதலமைச்சர் என்பவர் அவர் மட்டும்தான். 50 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டு பெரும் கட்சிகளைத் தவிர்த்து மக்கள் எங்களுக்கு மாபெரும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். போட்டி என்றால், திமுக மற்றும் அதிமுக இடையேவே தற்போது போட்டி கிடையாது. அப்படி இருக்க, இப்போது புதிதாக வருபவரை எப்படி எங்களுக்குப் போட்டியாகப் பார்க்க முடியும் என்று அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். தனுஷை எனக்கு நன்றாகத் தெரியும், என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். அது சரியா இல்லை தவறா என்று வரப்போகும் நாட்களில்தான் தெரியும் எனக் கூறினார். விஜய் என்ற பிம்பத்தை உடைக்கத் திராவிடக் கட்சிகள் தனுஷைக் கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுவது குறித்துப் பதிலளித்த அவர், கடந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் பெரிய கூட்டணியுடன் கணக்குப் போட்டார்கள், அதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துவிட்டார்கள் என்றார்.
ரஜினி பிரச்சாரம்:
அதேபோன்று மற்றொரு நட்சத்திரம் வருகிறார் என்று அவர்கள் கணக்குப் போடட்டும், அது அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமையும் எனத் தெரிவித்தார். ரஜினிகாந்த் அவருக்குப் பிரச்சாரம் செய்தால் மக்கள் மாறிடுவார்கள் என்ற கேள்விக்கு, “”கடந்த காலங்களில் இதுபோன்ற பல நிகழ்வுகளை நிறைய பார்த்துவிட்டோம். மக்கள் ஏற்கனவே தங்களது முடிவு என்னவென்று சொல்லிவிட்டார்கள். இனி யார் பிரச்சாரம் செய்தால் என்ன? அதற்கெல்லாம் இன்னும் நிறைய நேரம் இருக்கிறது,”” என அவர் பதிலளித்தார். சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றங்களைத் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என்று மாற்றியுள்ளது அரசியல் வருகைக்கான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது. கொடி தொடர்பான சர்ச்சைகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது திரைத்துறையிலும் தமிழக அரசியலிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதை அமைச்சர் தனது பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
#Dhanush #CMVijay #MariaWilson #TVK #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive