கடந்த வாரம் டொராண்டோவில் தனித்தனி சம்பவங்களில் இரண்டு பேரை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரின் புகைப்படங்களை டொராண்டோ காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களும் மே 15ஆம் தேதி மதியம் ‘யோங் ஸ்ட்ரீட்’ (Yonge Street) மற்றும் ‘செயின்ட் கிளேர் அவென்யூ ஈஸ்ட்’ (St. Clair Avenue East) ஆகிய பகுதியின் சுற்றுவட்டாரத்தில் நடந்துள்ளன.
அன்று மாலை 4:15 மணியளவில் பாதிக்கப்பட்ட ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை நெருங்கி பாலியல் வன்புணர்வு செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்பின்னர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கழித்து, அதே நபர் மற்றொருவரை நெருங்கி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட இவ்விருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
தேடப்பட்டு வரும் சந்தேக நபர் 5 அடி 8 அங்குலம் முதல் 5 அடி 10 அங்குலம் வரை உயரமும், தடித்த உடலமைப்பும் (Heavy build), கறுப்பு நிற பின்னப்பட்ட தலைமுடியும் (Braided hair) கொண்டவர் என விவரிக்கப்பட்டுள்ளது. அவர் கடைசியாக கறுப்பு நிற ஹூடட் ஸ்வெட்டர் (Hooded sweater), கறுப்பு நிறப் பேண்ட் மற்றும் பழுப்பு மற்றும் கறுப்பு நிற காலணிகளை அணிந்திருந்தார்.
இந்த நபர் குறித்த ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையையோ அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பையோ ரகசியமான முறையில் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.