சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது
அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கும் மூன்று பீடங்களையும் சேர்ந்த பௌத்த பீடாதிபதிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சிறையிலடைக்கப்பட்டுள்ள பௌத்த மதகுருமார் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் எழுப்பிய கவலைகள் நியாயமானவை என ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பௌத்தமதகுருமாரை மத உடைகளுடன் வெளியே அழைத்து செல்வதை தடுக்கும் அதிகாரம் தற்போதைய சட்டத்தின் கீழ் இலங்கை அதிகாரிகளுக்கு இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட பௌத்த பீடத்திற்கு அறிவிக்கப்படவேண்டு;ம் எனவும்,அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற புதிய விதிமுறைகளை மகாசங்கத்தினர் வழிமொழிந்தனர்.
ஜனாதிபதி இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார்,மேலும் இரண்டு வாரத்திற்குள் விதிமுறைகளை இறுதி செய்து தயார் செய்யுமாறு நீதியமைச்சருக்கு உத்தரவிட்டனர் என ஜனாதிபதியை சந்தித்த பௌத்தபீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.