சென்னை:
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
500 கோடி ஒதுக்கீடு:
இதுபற்றித் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \”சென்னை மாநகரில் பொதுமக்களுக்குச் சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கும், பேருந்துப் பணிமனைகளில் தேவையான சார்ஜிங் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஏற்படுத்திடவும் 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார்,\” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
755 மின்சாரப் பேருந்துகள்:
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் தற்போது 755 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 355 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவையாகும். தமிழ்நாடு மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வாகனத் தொகுப்பை நவீனமயமாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்திடும் விதமாகவும் நடப்பு நிதியாண்டில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு மொத்தச் செலவு ஒப்பந்த முறையின் கீழ், 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
இந்தப் புதிய பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளைப் பேருந்துப் பணிமனைகளில் ஏற்படுத்துவதற்காக இந்த 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையின் பொதுப் போக்குவரத்து சேவை மாபெரும் அளவில் நவீனமயமாக்கப்படுவதுடன், வாகனப் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பெருமளவு குறைக்கப்படும். மேலும் தினசரிப் பயணிகளுக்கு மிகவும் மேம்பட்ட மற்றும் சொகுசான போக்குவரத்து சேவை கிடைக்க உறுதியான வழிவகை ஏற்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#1000ElectricBuses #ChennaiMTC #CMVijay #TNTransport #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive