செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றில் நேற்றையதினம் (5.3.2026) உரையாற்றும் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று சர்வதேசத்தில் படுகொலை செய்யப்படுபவர்கள் குறித்து பேசுகின்றோம், இதேபோல தான் அப்போது செஞ்சோலையில் பெண் குழந்தைகள் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை.
தமிழீழ விடுதலை புலிகளை சேர்ந்த பலர் சரணடைந்தார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் போராளிகளை சரணடைய வைத்தார்கள், ஆனால் அவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
யுத்தம் முடிந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியிடம் பல குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டார்கள். அந்த குழந்தைகளுக்கு என்ன நடந்தது.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் மகன் பாலச்சந்திரன் சரணடைந்த போது குழந்தை என்றும் பாராது பிஸ்கட் கொடுத்து படுகொலை செய்தார்கள்.
ஊடகவியலாளரான இசைப்பிரியா சரணடைந்த போதும், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
எனவே, வடக்கிலும் கிழக்கிலும் நாட்டில் யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தர இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்” என்றார்.