சென்னை:
சண்டியர் திரைப்படத்தின் தலைப்பை நடிகர் கமல்ஹாசன் ஒரு வாரத்திற்குள் மாற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் எங்குப் படப்பிடிப்பு நடத்தினாலும் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைப்புக்கு எதிர்ப்பு:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர், “சண்டியர் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு எக்காரணம் கொண்டும் அந்தத் தலைப்பை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தித் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் மனு கொடுத்துள்ளோம். 23 வருடத்திற்கு முன்பே சண்டியர் எனப் பெயர் வைத்ததை எதிர்த்து, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தோம். அவர் கமல்ஹாசனை அழைத்து அறிவுறுத்தியதன் பேரில் அந்தத் தலைப்பு கைவிடப்பட்டது. கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா எடுத்த அதே உறுதியான நடவடிக்கையைத் தற்போதைய முதலமைச்சர் விஜய்யும் எடுக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டபோது, கமிட்டியைக் கூட்டி ஆலோசிப்பதாக அவர்கள் பதிலளித்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
வன்முறையைத் தூண்டும் வாசகம்:
தொடர்ந்து அவர், “பழிக்குப் பழி ரத்தத்தால் மட்டுமே தீர்க்கப்படும் என்ற வன்முறையைத் தூண்டும் வாசகம் இடம்பெற்றுள்ளதால், கமல்ஹாசன் மீது காவல்துறை ஏன் தாமாக வழக்குப்பதிவு செய்யவில்லை? பழிக்குப் பழி எனச் சட்டத்திற்கு விரோதமாக இளைஞர்களைச் செயல்படத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதால், தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினரிடம் கமல் மீது வழக்குத் தொடுத்துள்ளோம். நடிகர் கமல்ஹாசன் மீது தமிழ்நாடு டிஜிபி, உள்துறைச் செயலாளர் ஆகியோர் வழக்குத் தொடுக்க வேண்டும். திரைப்படம் என்பது பொழுதுபோக்கு இடமே தவிர, ஆயுத கலாச்சாரத்தையும் அரிவாள் கலாச்சாரத்தையும் ஒருபோதும் உருவாக்கக் கூடாது. தமிழ் திரைப்படங்களில் அரிவாள் கலாச்சாரம், ஆபாச கலாச்சாரம், சாதிய கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்,” என்று அவர் சாடினார்.
பிராண்ட் அம்பாசிடர்:
மேலும் அவர் கூறுகையில், “முன்பு வந்த சண்டியர் படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்ததால் படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கமல்ஹாசன் சினிமாத்துறையில் ஒரு பிராண்ட் அம்பாசிடர். அதனால் அவர் அந்தத் தலைப்பில் நடிப்பதை நாங்கள் மிகவும் கடுமையாக எதிர்க்கிறோம். ‘தேவர் மகன்’ படத்தால் 1993 முதல் 10 ஆண்டுகள் தென் தமிழகத்தில் கலவரம் மட்டுமே தொடர்ச்சியாக நடந்தது. எங்களுக்குக் கமல்ஹாசன் மீது எந்தவிதமான தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது. வன்முறையைத் தூண்டும் திரைப்படப் பாடல்களால்தான் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். தன்னை ‘ஆண்டவர்’ என்பதற்குப் பதில் ‘சண்டியர்’ என அழைக்கக் கமல்ஹாசனால் வலியுறுத்த முடியுமா? சண்டியர் தலைப்பை மாற்றுவதற்கு ஒரு வார காலம் கெடு விதிக்கிறோம். இல்லையெனில் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் வெடிக்கும்,” என்று டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசமாகக் கூறினார்.